×

மகளிர் உரிமை தொகை பிரேமலதா பாராட்டு

அருப்புக்கோட்டை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வரவேற்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயில், கல்வீரம்மாள் கோயிலில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பெண்கள் வரவேற்கிறார்கள். நானும் வரவேற்கிறேன். தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றி உள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். 75 வருடமாக இந்தியா என்று சொல்லிவிட்டு தற்போது பாரதம் என்று சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த பலனும் இல்லை.

டோல்கேட் வரிகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டது. பெண்கள் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் போட்டியிடுவோம் என்பதை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் விஜயகாந்த் அறிவிப்பார். விஜயபிரபாகரன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜயகாந்த்தான் முடிவு செய்வார்.இவ்வாறு கூறினார்.

The post மகளிர் உரிமை தொகை பிரேமலதா பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Praemalata ,Arapukkotta ,Premalatha Vijayakanth ,Virudhunagar District ,Arapukkota ,Premalata ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...